மூத்தோர் சொல்
"மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்பு கசக்கும், பின்பு இனிக்கும்" என்கிறார் தமிழ் மூதாட்டி. மூத்தோர் என்பது வயதில் எனவும், சான்றோர்கள் எனவும், அறிவில் சிறந்தவர்கள் எனவும் பொருள் கொள்ளலாம். அத்தகைய பெரியோர்கள் அவரவர் வாழ்வில் பல அனுபவங்களைப் பெற்றிருப்பர். வயதால் மூத்தோர் என்பதை விட குணத்தாலும் அறிவாலும் மேன்மை உடையவர்கள் என்பதே சாலச்சிறந்ததாக இருக்கும். வயதாலும் குணத்தாலும் அறிவாலும் நுண்ணறிவு பெற்று விளங்கக்கூடியோரின் துணை ஒருவரின் வாழ்வில் கிடைத்தற்கரிய செல்வம்.
திருவள்ளுவரும், "பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே; நல்லார் தொடர்கை விடல்" என்று திருக்குறளில் கூறுகின்றார். நல்லோரின் துணையையும் அவர் கூறும் அறிவுரைகளையும் கைவிடுவதனால் ஏற்படும் துயரமானது, பலவித பகைவர்களால் ஏற்படும் துயரத்தை விட கொடியதானதாகும் என்கிறார் வள்ளுவர். "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்; கெடுப்பார் இலானுங் கெடும்" என்று மற்றொரு குறளில் கூறுகிறார். மன்னன் ஒருவன் தான் செய்யும் தவற்றைச் சீர்ப்படுத்த தனக்கு துணையாக சான்றோர் ஒருவரை வைத்துக்கொள்ளவில்லை எனில், அவனை அழிக்க பகைவனே இல்லை என்றாலும் அவன் தானாகவே அழிந்து விடுவான் என்று மூத்தோரின் மேன்மையை வள்ளுவர் கூறுகிறார்.
அத்தகைய மூத்தோர் சொல்லை மறுத்து, அதை மீறி நடந்தால், எத்தகைய பெரிய காரியம் செய்துகொண்டிருந்தாலும் அது ஒருநாள் அழிந்து விடும் என்கிறார் ஔவையார். அவர்கள் சொல்வது முதலில் கசப்பாக தான் இருக்கும், அதை சரிவர கடைப்பிடிப்பவனுக்கு அது தரும் இன்பத்தின் பலனை வார்த்தைகளால் அளவிட முடியாது.

Comments
Post a Comment