சிவபாதசேகரன் – ஒரு பாடம்!
சிவபாதசேகரன் – ஒரு பாடம்!
பார் அளக்க பாரதத்தில்
பிறந்தவர் அருள்மொழிவர்மன். சோழர்களின் பெருமையை உலகறிய செய்தவர். தமிழர்களின் வீரத்தை
பற்பல வெற்றிகளால் பறைசாற்றியவர். நுணுக்கமான அறிவும், திறன்மிகு போர் உத்திகளும்,
வல்லமை மிக்க கடல் வாணிபங்களும், சலைக்காத சமயப் பற்றும் இவரை இராசராசனாக்கியது. இரண்டாம்
பராந்தக சோழனுக்கும் வானவன் மாதேவிக்கும் மகனாக ஐப்பசி சதயம் கிபி 947 ஆம் ஆண்டு சோழர்களுக்கு
உட்பட்ட தஞ்சையில் பிறந்தார். பெற்றோர்கள் இவருக்கு இட்டபெயர் அருள்மொழிவர்மன். அவரது
1078 ஆவது பிறந்த நாளில் அவரது அளப்பரிய ஆற்றலை சற்றே அனுபவிப்போம்.
சோழர்களை
உலகமறியச் செய்த படையெடுப்புகள்:
காவேரி ஆற்றுப்
படுக்கையின் ஓரத்தில் சில மகாணங்களின் அரசாக இருந்த சோழ பேரரசை விரிவடையச் செய்தவர்
இராசராசன். தனது மகனான இராசேந்திர சோழனுக்கும் திறம்பட போர்வித்தைகளை பயிற்றுவித்து
காந்தளூர் துறைமுகத்தைத் தாக்கச் செய்தார். காந்தளூர் துறைமுகத்தை கைப்பற்றியதன் மூலம்
மேற்கில் சேரர்களின் ஆட்சியை சோழ பேரரசினுள் கொண்டு வந்தார். சேரர்களின் மலையம், கொங்கணம்
மற்றும் துளவம் ஆகிய மூன்று அரசுகளையும் இராசராசன் வென்றதால் இவர் “மும்முடி சோழன்”
என்று அழைக்கப்பட்டார்.
விழிஞம் துறைமுகம்,
இன்றளவும் இந்தியாவின் கடற்சார் வாணிபத்தில் (Maritime trade) மிகவும் முக்கியமான ஒன்று.
பாண்டியர்களின் ஆட்சிக்குட்பட்ட இந்த துறைமுகத்தை பாண்டியர்களோடு போரிட்டு வென்று இதனை
“இராசராச மண்டலம்” என்று அறிவித்தார். இவர் துறைமுகங்களை வெல்வதன் மூலம் கடல்சார்ந்த
வாணிபத்தின் முக்கியத்துவம் மற்றும் தமிழர்களின்
கடல்வாணிப ஆளுமை திண்ணமாகிறது.
பகைவரையும்
பாராட்டும் நன்நெஞ்சே!
இன்றைய உதகமண்டலம்
அன்று குடமலை நாடு என்ற சிற்றரசுக்கு உட்பட்டது. 18 காடுகள் சேர்ந்த இந்த நாட்டின்
அரசன் மீனிசா ஆவான். இவன் 18 காடுகளுக்கு மத்தியில் மிகவும் பாதுகாப்பாக ஆட்சி புரிந்து
வந்தான். இதனை கைப்பற்றுவது அவ்வளவு எளிதல்ல. மீனிசா மிகவும் பராக்கிரமம் உடையவன்.
18 காடுகளைக் கடந்து சென்று மீனிசாவுடன் போர் செய்து குடமலை நாட்டை வென்றான் இராசராசன்.
மீனிசாவின் வீரத்தை மெச்சி அவனுக்கு “சத்திரிய சிகாமணி கொங்காளவான்” என்று பட்டத்தை
அளித்து மாளவி என்ற வளம் பொருந்திய கிராமத்தையும் பரிசாக அளித்தான். தன்னை எதிர்த்து
போரிட்டாலும், மீனிசாவின் வீரத்தைப் பாராட்டியதன் மூலம் இராசராசன் எத்தகைய நற்குணம்
படைத்தவன் என்று புரிந்துகொள்ள முடிகின்றது.
அரசியல்
ஆளுமை:
ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே, நவீன ஆட்சி முறையை மிஞ்சும் அளவிற்கு தனது அரசாங்கத்தை நடத்தினான். அவனது ஆட்சிமுறை
மிகவும் ஒழுங்குப் படுத்தப்பட்டதாக(Administratively efficient) இருந்தது. தன்னுடைய
ஆட்சிக்குட்ப்பட்ட நாடு முழுவது நிலங்களை அளந்து அதை சரியாக ஆவணப்படுத்தினான். நிலத்தின்
தரங்களுக்கு ஏற்ப வரி விகித்தான். இது இன்றைய காலத்தில் பொருளாதாரத்தில் பேசப்படும் Progressive taxation என்ற முறையை ஒத்துப்போகின்றது.
சோழர்களின் முழு ஆட்சிப் பகுதியும் மண்டலங்களாக பிரிக்கப்பட்டன. சிறு சிறு மண்டலங்களாக
இருப்பதால் ஆட்சி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் நேர்த்தியாகவும் அமைந்தது. ஒவ்வொரு
அலுவல்களுக்கும் மண்டலம் வாரியாக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். பிறகு அனைத்து
தனி அலுவலர்களையும் கண்காணிக்க “பேர் அலுவலர்கள்” நியமிக்கப்பட்டனர். இது இன்றைய நவீன
உள்ளாட்சி முறையை ஒத்து இருக்கின்றது.
ஒவ்வொரு மண்டலங்களுக்கும்
ஒரு படை காவல் காக்க அனுப்பப்பட்டது. எல்லைகளில் காவற்படை எல்லையை காத்து நின்றனர்.
இராசராசனின் ஆட்சிக்காலத்தில் ஊர் அவைக் கூட்டங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
ஊர் அவைக்கூட்டங்களில் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் பேசப்பட்டது.
இன்றைய
Cabinet முறை போலவே அன்றும் இராசராசன், அரசாங்க அலுவல்களை கவனிக்க அமைச்சர்களை நியமித்திருந்தான்.
கண்டராதித்த சோழன் என்பவர் சோழ தேசத்தில் உள்ள அனைத்து கோவில்களின் பராமரிப்பு பணிகளையும்
கண்காணிக்கும் பணியை செய்தார். சேனாதிபதி குரவன் உலகளந்தான் மற்றும் உலகளவித்த திருவடிகள்
சாத்தன் என்ற இருவரும் வரிவிதிப்பு, வரி பகிர்வு ஆகிய பொறுப்புகளை வகித்தனர். இன்றைய
நிதி அமைச்சரின் வேலையைப் போன்றது. ஈராயிரவன் பல்லவராயன் என்பவர் அரசியல் வருவாயை கவனித்தார்.
அரசியல் வருவாயையும் வரி வருவாயையும் தனித்தனியாக இராசராசன் கவனித்ததன் மூலம் அவன்
எத்தகைய நேர்மையானவன் என்று யூகிக்க முடிகின்றது. மிகவும் நுணுக்கமான முறையில் நிதி
கையாளப்பட்டுள்ளது என்பது நிதர்சனம்.
திருவையன் சங்கரதேவன்
என்பவர் “உயர்தர அலுவலாளர்” ஆவார். இது இன்றைய மத்திய அரசில் உயரிய பதவியான
Cabinet Secretary க்கு ஈடான ஒன்று. அரசாங்கத்தில் நடைபெறும் அனைத்து நகர்வுகளையும்
அறிந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் முக்கிய பதவி இதுவாக இருந்திருக்கின்றது.
பட்டோலைப் பெருமான்
என்ற ஒரு அதிகாரி அரசருடன் நடைபெறும் அனைத்து விதமான உரையாடல்கள், சந்திப்புகளின் கலந்துரையாடல்கள்
என அனைத்தையும் ஆவணப்படுத்தும் அதிகாரியாக இருந்துள்ளார். இன்றைய காலத்தில் Minutes
of the Meeting என்பதற்கு சமமான பணி இது.
மேலும் நாணய அதிகாரி,
கண்காணிப்பாளர், வரிக்கூறு செய்பவர், நீதிமன்றத்தார், விடை அதிகாரி(அரசருக்கு வரும்
மணுக்களுக்கு அரசரிடம் ஆலோசித்து விடை எழுதும் பணி) என பல துறை அதிகாரிகளுடனும் அலுவலர்களுடனும்
தனது ஆட்சிமுறையை மிகவும் நேர்த்தியாக நடத்தியுள்ளார் இராசராச சோழன்.
சமயப்பணி:
இராசராசனின் சமயப்பணிக்கு
சிறந்த சான்று தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயம் ஒன்றே! அதுகுறித்து விரிவாக வேறொரு கட்டுரையில்
காண்போம்.
தேவார திருமுறைகளை
இன்று நாம் படிக்கின்றோமேயானால் அதற்கு முக்கிய காரணம் இவரே. திருநாரையூரில் நம்பியாண்டார்
நம்பி என்ற ஒரு சைவப் பெரியவர் இருந்தார். அவரை சென்று வணங்கி தனக்கு தேவாரத் திருமுறைகள்
மீது இருக்கும் ஆர்வத்தை வெளிப்படுத்தி அதனை தொகுக்க வேண்டும் என்று வேண்டினான். அவர்
அவ்வூரில் இருக்கும் பொல்லாப்பிள்ளையாரைப் பிரார்த்தித்தார். பிறகு, அரசனை நோக்கி அனைத்து
திருப்பதிகங்களும் சிதம்பரத்தின் பொன்னம்பலத்தில் மேற்கு திசையில் ஒரு அறையில் இருப்பதாக
நம்பியாண்டார் நம்பி கூரினார். இருவரும் தில்லைப் புறப்பட்டனர். அங்கு சென்று திருப்பதிகங்களின்
ஏடுகள் சிதிலமைந்து இருந்தன. அவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தான் இராசராசன்.
தேவார ஏடுகளை மிகவும் பக்தியுடன் எடுத்துக் கொண்டு வந்து அதை பன்னிரு திருமுறைகளாக
தொகுத்து உலக பிரசித்தி செய்தான். தஞ்சை பெரிய கோவிலில் 48 ஓதுவார்களை நியமித்து, தேவார்
திருப்பதிகங்களை பன்னிரு திருமுறைகளாக தொகுத்து அவற்றை நித்தியப்படி பாராயணம் செய்யும்
படியாக பணிந்தான். தன்னுடைய சிவ பக்தியின் காரணமாக தன்னை ‘சிவப்பாத சேகரன்’ என்று அழைப்பதிலேயே
விருப்பம் கொண்டார்.
அருள்மொழி வர்மன்
நீண்டகாலமாக தில்லையில் கனக சபையில் வீற்றிருக்கும் நடராஜனிடம் இருந்த விரதத்தை வியந்தனர்
தில்லை வாழ் அந்தணர்கள். அவர்கள் அருள்மொழிவர்மனுக்கு
அளித்த பட்டமே “இராசராசன்” ஆகும். இப்பெயர் இவருக்கு 19 ஆவது வயதில் வழங்கப்பட்டதாக
கல்வெட்டுகள் கூறுகின்றன. தனக்கு பல பட்டங்கள வழங்கப்பட்டிருந்தாலும், இறுதிவரை, இதனை
தனது அடையாளமாக மாற்றினார். இதனை வரலாற்று ஆசிரியர்களும் தத்தம் புத்தகங்களில் பதிவு
செய்துள்ளனர்.
சென்ற இடங்களிலெல்லாம்
சிவாலயங்களை அமைத்தும் மற்ற ஆலயங்களை சீர்ப்படுத்தியும் நமது தர்மத்திற்கு பற்பல பணிகளை
செய்துள்ளார்.
இவ்வளவு பெருமைகளுக்கும்
பண்பிற்கும் உரிய நமது இராசராசசோழனின் தேசப்பற்றும் தெய்வ பக்தியும் பலருக்கும் எடுத்துக்காட்டாய்
திகழ்கின்றது.
இவரது வெளிநாட்டுக்
கொள்கை, வெளிநாட்டு வர்த்தகம், வெளிநாட்டு படையெடுப்புகளை மற்றொரு கட்டுரையில் காண்போம்!
-லோகேஷ்
01/11/2025
(ஐப்பசி ஸதயம்)
👏🏻
ReplyDelete