மாண்புமிகு மக்களாட்சி!

 

மாண்புமிகு மக்களாட்சி!

     நமது நாடு பழம்பெருமை மிக்க கலாச்சாரத்தையும் அரசியலில் நுணுக்கமான பல முன்னெடுப்புகளையும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்துள்ளதாக வரலாற்று குறிப்புகளும் இதிகாச புராணங்களும் கூறுகின்றன. மக்களாட்சி என்ற ஆட்சிமுறை சுதந்திரத்திற்கு பின்தான் நாம் பின்பற்றுகிறோம் என்ற எண்ணம் சிலருக்கு இருப்பது நம்மால் காண முடிகிறது. அதுவே உண்மையாக இருப்பினும், அதை வாங்க நம் முன்னோர்களான சுதந்திர போராட்ட வீரர்கள் பாடுப்பட்டது தான் எத்தனை என்பதை ‘இந்திய தேசிய இயக்க வரலாறு’ நமக்கு காண்பிக்கின்றன.

     நம் மக்களாட்சி எத்தகைய பழமை வாய்ந்தது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு நமது முதல் இதிகாசமான இராமாயணத்தில் காணலாம். இராமனின் தந்தையான தசரத சக்கரவர்த்திக்கு 60000 ஆண்டுகள் நாட்டை ஆண்ட பின், இராஜ்ஜியத்தைத் தனது மகனான இராமருக்கு கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்பொழுது அவர் மன்னராட்சி முறையிலேயே தான் ஆட்சி புரிந்துவந்தார். மன்னராட்சி முறையில் தந்தைக்குப் பிறகு மகன் தான் நாடாள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. தசரதருக்குப் பின் இராமர் என்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், தசரதர் ஒரு மந்திரி சபையைக் கூட்டி ஜனநாயக முறைப்படி அங்குள்ள அமைச்ச்ர்களிடம் இது குறித்து ஆலோசித்து வாக்கெடுப்பு நடத்துகிறார். இச்செயல் மூலம் மன்னராட்சியில் நல்லாட்சி புரிந்த தசரதனும் விரும்பியது நாம் இன்று பேசக்கூடிய மக்களாட்சி என்பதை மறுக்கவா முடியும்? பாரத தேசம் மக்களாட்சிக்குக் கொடுத்த மதிப்பையும் மாண்பையும் இதனை விட சிறந்த சான்றுடன் விளக்க தான் முடியுமா?

     மக்களாட்சியில் ஒவ்வொரு குடிமகனின் வாக்கும் நாட்டை ஆள வேண்டும். தேர்தலில் வென்று ஆட்சியமைத்தப் பிறகு தனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் எவ்வித பாகுபாடின்றி செயல்படுவதே ஆட்சியாளரின் கடமை. சில இடங்களில் இன்று தேர்தல் என்பது உரிமைகளைக் காக்கும் ஒரு கடவுச்சீட்டு என்னும் நிலை மாறி அதிகாரத்தை அபகரிக்கும் ஒரு கருவியாகிக் கொண்டிருக்கின்றது சற்று வேதனை அளிக்கிறது.

மக்களாட்சியில் ஆளுமைகளின் முன்னுரிமை:

     நமது முன்னாள் குடியரசு தலைவர் Dr. அப்துல் கலாம் அவர்கள், தனது ‘Governance for growth in India” என்ற புத்தகத்தில், ஒரு ஆட்சியாளனின் அரசியல் பயணம் என்பது 70% வளர்ச்சிக்கான அரசியலும் (Developmental Politics), 30% தேர்தலுக்கான அரசியலுமாக (Electoral Politics) இருக்க வேண்டும் என்று கூறுகிறார். தேர்தல் நேரத்தில் செய்யும் அரசியலானது ஒருவரை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க உதவும். வளர்ச்சிக்கான அரசியல் என்பது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பவரை தலைசிறந்த ஆளுமை மிக்க ஆட்சியாளராய் மாற்றி விடும். அதுவே மக்களாட்சியின் குறிக்கோளாகும்.

     வளர்ச்சிக்கான அரசியலை ஒரு கட்சியோ ஆட்சியாளரோ முன்னெடுக்கும்போது, கட்சி பேதமின்றி, தனி மனித விருப்பு வெறுப்பின்றி அதனை ஆதரிக்க வேண்டும். காரணம், மக்களுக்கான வளர்ச்சியை யார் செய்தாலும் அது தேசத்திற்கான வளர்ச்சி என்ற கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். அதுவே, மக்களாட்சியில் மக்களுக்காக களத்தில் நிற்கும் ஆளுமையின் அடையாளம்.

மக்களாட்சியின் கோவில்:

      மக்களாட்சியுடைய நாட்டின் பாராளுமன்றமும் மாநிலத்தின் சட்டமன்றமுமே மக்களாட்சிக்கான கோவில். நாம் கோவிலுக்குச் சென்றால் நமது பிரார்த்தனைகளையும் கோரிக்கைகளையும் இறைவனிடம் முன்வைக்கின்றோம். காரணம், அங்குள்ள கடவுள் அதை நமக்கு செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை தான். அதுபோல 140 கோடி மக்களும் ஒன்று சேரும்படியான கட்டிடமோ அதை நிர்வகிக்கும் திறனோ நம்மில் யாரிடமும் இல்லை. நமது கோரிக்கைகளை நமது பிரதிநிதிகளிடம் கோரினால் அது மன்றங்களில் எதிரொலிக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. அத்தகைய பிரதிநிதிகள் மக்களின் சேவகர்களாக மக்களாட்சியின் கோவிலுக்குச் சென்று முறையிடுவது அவர்களது கடமை.

      மக்களாட்சியின் மாண்பு என்பது மக்கள் பிரதிநிதிகளின் நடத்தைப் பொறுத்தே அமையும். அத்தகைய மாண்பு என்பது மக்களின் குறைகளை முன்வைத்து அக்குறைகள் மீது நன்றாக விவாதித்து, அவசியமிருப்பின் சட்டங்களைச் சரிவர இயற்றி, அச்சட்டங்ளைத் துறை சார்ந்த வல்லுநர்களிடத்தில் கலந்து ஆலோசித்து, அந்த காலத்திற்கேற்ப தேவையான உள்ளீடுகளை அச்சட்டங்களில் புகுத்தி, அதனை மற்ற பிரதிநிதிகளின் விவாதத்திற்காக அந்த அவையில் தாக்கல் செய்து, அவையின் ஒப்புதலோடு சட்ட முன்வடிவை சட்டமாக்கி மக்களிடம் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதே ஆகும்.

     மக்களாட்சியின் ஆலயத்தில் நேரம் வீணாக்காமல் பார்த்துக்கொள்வது ஒவ்வொரு உறுப்பினர்களின் கடமையாகும். அவையில் நடைபெறும் விவாதங்களையும் நடத்தைகளையும் அரசியல் பாரபட்சமின்றி தன் தொகுதி மக்களுக்கு அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் ஒளிவுமறைவின்றி எடுத்துரைக்க வேண்டும். அவற்றை என் தொகுதி மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் அந்த அள்விற்கு அவர்களுக்கு ஞானம் இல்லை என்று கூறும் உறுப்பினர்களுக்கு வள்ளுவர் வழினின்று தான் பதில் கூற வேண்டியுள்ளது.

“உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.”

 

அதாவது, ஒருவரின் நிலமையோ அல்லது ஒரு அவயின் தன்மையையோ அறிந்து, தான் கற்ற கல்வியை அவர்களுக்கு ஏற்ற முறையில் கூற இயலாதோர் உயிரோடு இல்லாதவரோடு ஒப்பிடப்படுவார் என்பது திருவள்ளுவரின் கருத்து.

     தமது நோக்கங்களைப் புறந்தள்ளி, மக்களின் தேவைகளை அகங்கொண்டு, வீண் அரசியலை அப்பாற்படுத்தி, ஆழ்ந்த விவாதத்தை முன்னெடுத்து உரிய தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதே மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மாண்புமிக்கவர்களிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது. அதுவே மாண்புமிகு மக்களாட்சி!

-லோகேஷ்

16/03/2023

Comments

Popular posts from this blog

சிவபாதசேகரன் – ஒரு பாடம்!

A birthday tribute to the unifier!

மூத்தோர் சொல்