அமைதியே ஆயுதம்
தமிழில் நீதி நூல்களின் எண்ணிக்கை ஏராளம். பள்ளிக்கூடங்களில் அதிகமாக கற்றுத்தரப்படும் நீதிப்பாடங்கள் பொதுவாக ஔவையாரின் நீதி நூல்களிலிருந்தே இருக்கும். அதிலும் கொன்றைவேந்தன் பொதுவாக அனைவராலும் அறியப்பட்டதாக இருக்கும். அடுத்த சில நாட்களுக்கு ஔவையின் நீதிகளைக் காண்போம்!
"அமைதியாய் இரு" என்ற சொற்றொடர் நம் அனைவரின் செவிகளிலும் அவ்வப்போது விழும் ஒன்றாக இருக்கும். எந்த சூழ்நிலையிலும் அமைதியாய் இருப்பது மிகவும் கடினமான ஒன்று. அவ்வாறு அமைதியாய் இருக்க வேண்டுமெனில், நமது மனதானது மிகவும் பக்குவப்பட்டிருக்கவேண்டும். அத்தகைய பக்குவம் ஓரிரு நாட்களில் வருவது அல்ல. பொறுமையும் அமைதியும் ஒருவரிடத்தில் வந்துவிட்டால், அவர்களுக்கு எதிர்போக்கு கொண்டவர்கள் என்று யாரையும், எதையும் காண முடியாது.
அமைதியும் பொறுமையும் கோழைக்கான தகுதிகள் அல்ல. அவை இரண்டும் பலம்பொருந்தியவர்களிடமே நிலைபெறும். சினமும் அவசரமும் குறைந்த காலத்தில் ஒரு செயலை முடிவுறச் செய்யும். அமைதியும் பொறுமையும் காரியத்தை முடிக்க சற்று நேரமானாலும், அவ்வாறு முடிக்கப்பட்ட காரியத்தின் நோக்கமும் தாக்கமும் பயனும் அளவிட முடியாததான நன்மையை விளைவிக்கும். சினத்தால் பேசப்படும் வார்த்தைகளின் தாக்கம் ஆபத்தானது. சினமோடு பேசுபவர்களிடமும் பொறுமையோடு இருப்பவர்களின் பலம் எண்ணிலடங்காதது. அந்த பலம், தகுந்த நேரத்தில் சினமோடு பேசியவருக்கும் பொறுமையையும் அமைதியையும் தர வல்லது.
பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியும் "என்றும் நடவாது என் முயற்சியினும் நடவாது, நடப்பது நான் தடை செய்யினும் நில்லாது, ஆதலால் மௌனமாய் இருத்தலே நலம்" என்கிறார்.
சினமும் அதிகாரமும் செய்யமுடியாத அதிசயங்களை மௌனம் ஒன்றே சாதிக்கும். அமைதியாய் இருத்தலே உயர்ந்த ஞானத்திற்கான வரம்பு என்ற நீதியை நிலைநாட்டிய தமிழ் மூதாட்டிக்கு வணக்கங்கள்!

Comments
Post a Comment