நிதானமே நிரந்தரம்!
இன்றைய காலக்கட்டத்தில் உலகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. வேகமாக ஓடும் இவ்வுலகில், நாமும் அதன் வேகத்திற்கு ஈடுக்கொடுக்கும் வகையில் ஓட வேண்டும் என்ற எண்ணம் அனைவருள்ளும் இருக்கின்றது. வேகமாக ஓட வேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றவர்கள், அவர்களின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவர்களுக்கு கை கொடுக்குமா என்று ஆராய்ந்து முடிவெடுக்க தவறிவிடுகின்றனர். உலகம் ஓடும் வேகத்தில் ஓடவில்லையெனில், உலகத்தார் தம்மை என்ன நினைப்பாரோ என்று எண்ணி, நாமும் ஆராயாது ஓட அரம்பித்துவிடுகின்றோம். சில நேரங்களில் அத்தகைய ஓட்டம் வெற்றியை கொடுக்கலாம், பலநேரங்களில் அதன் விளைவுகள் துயரத்தைத் தர நேரிடும்.
நமது வாழ்வில், பொறுமையாக, அமைதியாக, நிதானமாக இருக்க வேண்டிய சூழல்கள் பற்பல. ஒவ்வொரு முடிவும் எடுப்பதற்கு முன் நாம் இத்தகைய மனப்பாண்மையோடு தான் இருக்க வேண்டும். அத்தகைய முடிவுகளை எடுக்கும் முன் சான்றோர்களிடம் ஆராய்ந்து, அவர்களின் துணையோடு எடுப்பது சாலச் சிறந்தது. அவ்வாறு எடுக்கப்படும் முடிவுகளும் செயல்களும் எண்ணிலடங்கா மேன்மையை நமக்குத் தரும். அது, நமது பக்குவத்தை வெளிப்படுத்தும். நாம் எடுத்த முடிவுகளிலும் செயல்களிலும் நமக்கு முதலில் உறுதி வேண்டும். ஆரம்பகாலத்தில், அது தோல்வியை தந்தாலும், ஒருநாள் அது மிகப்பெரிய வெற்றியை தரும். அந்த வெற்றிக்கனியைப் பறிக்கும் வரை நமது பாதையில் பொறுமையாகவும் நிதானமாகவும் உறுதியாகவும் நடக்க வேண்டும்.
இவ்வாறு தன் செயற்பாடுகளில் உறுதியும் நிதானமும் நிறைந்து இருந்தால், இவ்வுலகமே நம்மை மேலாக தாங்கும் என்கிறார் ஔவையார்.

Comments
Post a Comment