தற்பெருமை கூடாது!
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமைகள் உண்டு. அத்தகைய திறமைகள், அவர்களது கடின உழைப்பாலும் பயிற்சியாலும் அவர்களிடத்தில் வளர்ந்துள்ளது நிதர்சனமான உண்மை. அத்தகைய திறமைகள் ஒவ்வொருவரையும் வாழ்வில் மேன்மை அடையச் செய்யும். அத்தகைய திறமைகளால் ஒருவர் நிறைவடைந்து விடுவாரா? என்றால், இல்லை.
திறமையை வைத்து பெயரும் புகழும் செல்வமும் சம்பாதித்துக் கொள்ளலாம். தம்மிடம் உள்ள ஒரு தனித்திறமை ஒருவரை மேன்மை அடையச் செய்யும். அதே தருணத்தில், நாம் அதற்கே மிகுந்த முக்கியத்துவம் அளித்தோமேயானால், நம்மை அது ஆட்கொண்டுவிடும். அத்தகைய திறனை வளர்த்துக் கொள்வதில் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர, அத்தகைய திறமைகளால் வரும் பற்பல புகழ் போன்ற பலனில் முக்கியத்துவம் அளித்தால், நாமே நம்மைப் பற்றி புகழ்ந்து பேச ஆரம்பித்துவிடுவோம்.
அத்தகைய தற்புகழ்ச்சி, நாளடைவில் நமது ஆணவத்தைப் பெருக்கி விடும். திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதை விட, நம்முடைய புகழை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்த துவங்குவோம். பிறகு, முன்பெல்லாம் நம் திறமையைப் புகழ்ந்தோர், தற்போது புகழவில்லை எனில், அவர்கள் மீது நமக்கு ஒருவிதமான வெறுப்பு ஏற்பட்டுவிடும். அது இருவரிடமும் உள்ள நட்புறவை பாதிக்கும். அது பற்பல சிக்கல்களில் நம்மைக் கொண்டு விட்டுவிடும். நாம் திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்தினால், சான்றோர்களை நாடி அத்தகைய திறமைகளை வளர்த்துக் கொண்டால், பேரும் புகழும் ஒரு பொருட்டு ஆகாது.
அதனையே, கையில் கூர்ந்த அம்பு இருந்தாலும், அத்தகைய அம்பை கையாள்வதில் உலகம் போற்றும் வல்லவராக இருந்தாலும், தன்னுடைய வீரத்தைக் குறித்து தானே தற்பெருமை பேசிக்கொள்பவன் வீரனாக மாட்டான் என்று கூறுகிறார் ஔவையார்.

Comments
Post a Comment