குருவின் அவசியம்!
வாழ்வின் நோக்கமே வெற்றியடைதல். வெற்றி என்பதற்கான வரையறை அனைவருக்கும் பொதுவானது கிடையாது. அதற்கான வரையறை ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு வேளை உணவு கிடைப்பதே வெற்றியாக கருதுபவரும் இவ்வுலகத்தில் உண்டு. கோடி கோடியாக சம்பாதித்தாலும் இன்னும் பல கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருப்பவர்களும் உண்டு. இவ்விரு தரப்பினருக்குமே வழிகாட்டி என்பவர் இன்றியமையாத ஒருவராக உள்ளார். முதல் தரப்பினருக்கு நல்ல ஒரு வழிகாட்டி கிடைத்தால், அவரது வாழ்வை மேம்படுத்திக்கொள்ள வழிபிறக்கும். இரண்டாம் தரப்பினருக்கு நல்ல ஒரு வழிகாட்டி கிடைத்தால், வாழ்வின் நோக்கத்தை நன்றாக புரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
மனித பிறப்பின் நோக்கமே வீடுபேறடைதல். "பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்; இறைவன் அடி சேராதார்" என்று திருவள்ளுவரும் இதனை தெளிவுப்பட கூறுகின்றார். உலக காரியங்களிலேயே நமக்கு ஒரு ஆசான் தேவைப்படும்பொழுது, இறைவனை அடைய ஒரு குரு இன்றியமையாதவராக உள்ளார். "குருவில்லாமல் வித்தை பாழ்" என்ற முதுமொழி குருவின் அவசியத்தை உணர்த்துகிறது. உலக அறிவால் ஒருவர் ஆசான் ஆகிவிடலாம். நம் வாழ்வின் நோக்கத்தை அடைய உதவும் குருவானவரோ உயர்ந்த ஞானத்தைப் பெற்று, காலத்திற்கு ஏற்றார்ப்போல் கரையேற வழிகாட்டி ஒவ்வொருவரையும் கரையேற்றிவிடுவார். நமது வாழ்வெனும் கப்பலுக்கு நங்கூரம் போல் அமைபவரே குரு.
எப்படி மாலுமி இல்லாத ஒரு கப்பல் கரையை அடையாதோ, குருவில்லாத ஒருவனுடைய வாழ்வும், தலைவனில்லாத குடும்படும், அரசனில்லாத நாடும் கரையேற முடியாது என்பதை உணர்த்துகிறார் தமிழ் மூதாட்டி.

Comments
Post a Comment