மனோபலம்!
இன்பமும் துன்பமும் கலந்த ஒரு அற்புத படைப்பே வாழ்க்கை. இன்ப காலத்தில் நாம் மிகுந்த பலத்துடன் இருப்பது போல் நமக்குள் ஒரு வலிமை பிறக்கும். மிகவும் மகிழ்வாக இருக்கும்போது எடுக்கப்படும் முடிவுகளிலும் சொல்லப்படும் வார்த்தைகளும் உணர்ச்சியால் வெளிப்பட்டவை. மகிழ்வான காலத்தில் தோன்றும் வலிமையானது நிரந்தரம் கிடையாது. அது பற்பல காரியங்களை செய்ய நம்மை ஊக்குவிக்கும். ஆனால், நிரந்தரமான வலிமை என்பது அன்றாடம் நமது செயல்களிலிருந்து வெளிப்படுவதே ஆகும்.
துன்ப காலங்களில் நமது மனம் மிகவும் பலவீனமாக இருக்கும். ஆனால், அத்தகைய காலத்தில் தான் மனதை பலமாக வைத்துக்கொள்ள வேண்டும். அச்சமயங்களில் மனம் தளர்ந்து விட்டோமேயானால், மீண்டு எழ சிரமமாக இருக்கும். புயல் காற்று வீசும்போது, புயல் சுழன்று சுழன்று அடிக்கும், ஆனால், அப்புயலின் மையப்பகுதியில்(The eye of the cyclone) ஆழ்ந்த அமைதி நிலவும். மையப்பகுதியை சுற்றி பலத்த சப்தத்துடன் வீசும் அந்த காற்றின் தாக்கம், புயலின் மையப்பகுதியை துளியளவும் பாதிக்காது. அதுபோல, நம்மைச் சுற்றி நடக்கும் செயல்களால் நமது மனம் வேற்றுமை அடையாமல் இருக்குமானால், அந்த மனத்தின் வலிமை அளவிட முடியாது. பொறுமை, அமைதி, தயை போன்ற ஆத்ம குணங்கள் அத்தகைய மன வலிமைக்கு வித்திடும். வலிமை பெற்ற மனம் துன்ப காலத்தில் தளரும் அடையாது, இன்ப காலத்தில் மகிழ்வால் துள்ளி துள்ளி குதிக்கவும் குதிக்காது. அமைதியான மனமே வலுவான மனம்.
இதனையே ஔவையார் "கேட்டில் உறுதி கூட்டும் உடைமை" என்கிறார். துன்பமும் வறுமையும் வந்த காலத்ததில் மனந்தளராது இருப்பதனால், இழந்த அனைத்து செல்வத்தையும் திரும்பப் பெற முடியும் என்று கூறுகிறார்.

Comments
Post a Comment