தானமே தனம்!
"தனக்கு மிஞ்சியது தான் தானமும் தர்மமும்" என்ற பழமொழி நாம் அனைவரும் விரும்பி பயன்படுத்துவது ஆகும். இதனை அடிக்கடி சாமானிய மனிதர்களும் பேச்சுப்போக்கில் பின்பற்றுவதை நாம் கண்டிருப்போம். யாராவது ஒருத்தர் அதிகப்படியான தானம் செய்தால், அவருக்கு நாம் கூறும் முதல் அறிவுரையாக இந்த பழமொழியாக இருக்கும். தானமும் அறச் செயல்களும் நம்முடைய தேவைக்குப் போகப் பிறருக்கு செய்வது என்பதாக இதன் பொருளை நாம் புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், இதன் பொருள் வேறு.
ஒருவர் செய்யும் தானமும் அறம் சார்ந்த செயல்களும் என்றென்றும் எந்நிலையிலும், செய்பவரை மிஞ்சி நிற்கும். அத்தகைய ஒருவர் மறைந்த பின்னும் அவர்செய்த தானமும் அறச்செயல்களும் அவரை உலகத்தாருக்கு நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். அவை அவரின் அடையாளமாக மாறி, அவருக்கு முன் அனைவருக்கும் அத்தகைய செயல்கள் தான் கண்ணில் படும். எனவே தானமும் அறச்கெயல்களும் தனிமனிதனைக் காட்டிலும் உயர்ந்ததாக இருப்பாதால், அது 'தனக்கு மிஞ்சியது' அல்ல 'தன்னையே மிஞ்சியது' என்று பொருள்கொள்ள வேண்டும் என்பார் என் குருநாதர். தானம் செய்ய தனம் முக்கியமல்ல, மனமே முக்கியம்!
மழை பொழிவது குறைந்து போனால், தானம் செய்வோரின் எண்ணிக்கையும் குறைந்து போகும் என்கிறார் ஔவையார். அதே சமயத்தில், அதிக மழை பொழிந்து நாடு முழுவதும் செல்வ செழிப்பாக இருக்குமானால், நாட்டில் தானம் செய்வோரின் எண்ணிக்கை தானாக பெருகும் . நிறைய மழை பொழிய வேண்டுமானால், நிறைய தர்மச்சிந்தனைகள் கொண்டவர்கள் உலகில் வாழ வேண்டும். "நல்லோர் ஒருவர் உளரேல், அவர்பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை" என்ற ஔவையாரின் வாக்கின் மூலம் இது நிதர்சனமாகிறது.
தர்மம் பெருகின், மழை பெருகும்; மழை பெருகின், தானம் பெருகும்;
தானமும் தர்மமும் பெருகின், மனிதம் பெருகும்!

Comments
Post a Comment