குற்றம் தவிர்ப்போம்!
ஒருவர் செய்யும் செயலில் நமக்கு விருப்பும் இருக்கலாம், வெறுப்பும் இருக்கலாம். வெறுப்புகள் இருக்கும் சமயத்தில், குற்றம் கூற துவங்கிவிடுகிறோம். அத்தகைய குற்றம் ஒருவரிடத்தில் கண்ட பிறகும், அன்பாக நடந்து கொண்டு உரிய சமயத்தில் அவரிடம் அதைப்பற்றி எடுத்துக் கூறி அந்த குற்றத்தை சரி செய்பவர்களே மேன்மை உடையவர்கள். ஆனால், அனைவரிடமும் அத்தகைய மேன்மை எளிதில் வந்துவிடுவதில்லை. காரணம், குற்றமற்றவர்களுக்கே அத்தகைய மேலான குணம் அமைகிறது. நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு, அது சற்று கடினமான ஒன்று.
பிறரிடம் குற்றம் கண்ட பிறகும் பொறுமையாக இருக்க திருவள்ளுவர், "ஏதிலார் குற்றம்போல் தங்குற்றம் காண்கிற்பின்; தீதுண்டோ மன்னும் உயிர்க்கு" என்ற ஒரு வழி சொல்லுகிறார். பிறரது குற்றத்தைக் காண்பது போல, நம்மிடம் உள்ள குற்றத்தை நாம் காணும் போது, குற்றம் கூறும் பழக்கமும் நம்மைவிட்டுப் போகுமாம், அதனால் ஏற்படும் பாதிப்புகளும் நம்மை நெருங்காதாம்.
இதனையே ஔவையாரும் "ஒருவரிடம் குற்றம் பார்த்து, அவரிடம் அக்குற்றத்தைக் கூறும்பொழுது, உறவுகள் அறுந்து விடும்." என்கிறார். இவ்வாறு அனைவரிடமும் குற்றம் பார்க்க தொடங்கினால், காடு போன்ற அடர்த்தியான உறவுகள் நீங்கி, வாடிய ஒரு தனிமரமாக நிற்கும் அவலம் ஏற்படும்.

Comments
Post a Comment