எத்தகையவரும் நம்மவரே!
ஏற்றமும் தாழ்வும் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாக உள்ளது. மேடு என்று ஒன்று இருந்தால், பள்ளம் என்று ஒன்று இருக்க தான் செய்யும். அதே சமயத்தில், அனைத்து பயணங்களும் பள்ளத்தில் மட்டுமே அமையாது. ஏற்றம் ஏற்பட்டு தான் ஆகும். சிலருக்கு பல்வேறு காரணங்களால், பள்ளத்தில் நீண்ட நாட்கள் பயணம் நிகழ்கிறது. அச்சமயங்களில், அத்தகையோருக்கு தாழ்ந்த மனப்பாண்மை, மனந்தளர்ச்சி ஆகியவை அழையா விருந்தாளியாக பயணத்தில் சேர்ந்து கொள்கின்றன. தன்னம்பிக்கை கொண்டு தங்களது பயணத்தை மேட்டில் ஏற்ற முயற்சிக்காதவர்களை இவ்வுலகம் தாழ்ந்தவராக அடையாளப் படுத்திவிடுகின்றது. சமூகத்தால் அவர்கள் நடத்தப்படும் விதமும் கவலைக்குறியதாக உள்ளது. முயற்சிகளும், மனதளவில் பலத்தையும் விட்டதனால், பல்வேறு தலைமுறைகள் ஆனாலும் அத்தகையவர்கள் மீள்வது கடினமாக உள்ளது.
ஆனால், சாமானியர்கள் அத்தகைய மனிதர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதையே ஔவையார் இங்கு கூறியுள்ளார். பொருளாதாரம், சமூக நிலைமை, உடல் ஊனம், கல்வியறிவு போன்றவைகளால் ஒருவர் நொந்து போயிருந்தால், அவரிடம் நாம் கூடுதல் பணிவோடும் பொறுப்போடும் நடந்து கொள்ளவேண்டுமாம். இவற்றால் தாழ்வு அடைந்திருப்பதனால் அவர்கள் தீயவர்கள் ஆகிவிடமாட்டார்கள். ஒருபொழுதும் அவர்களைக் கடினமான சொற்களால் நோகடிக்க கூடாது. நம்முடைய நிலைமை இறைவனுடைய கருணையால் நல்லபடியாக இருக்கும்போது, அவர்களுக்கும் அத்தகைய காலம் பிறக்கும்.
பொருளாதார ரீதியாக அத்தகையோருக்கு நாம் உதவி செய்ய முடியாமல் போனாலும், அவர்களிடம் நாம் பழகும் விதத்தில் அவர்களுக்கு ஒரு உற்சாகம் பிறக்க வேண்டும். தன்னம்பிக்கை மேலோங்க வேண்டும். இது எதையும் நம்மால் செய்ய முடியைவில்லையெனில், அவர்களை நோகடிக்காமல் கடந்து செல்வது நல்லது. திருவள்ளுவரும், "எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்; மாணா செய்யாமை தலை" என்கிறார். எக்காலத்திலும் ஒருவருக்கும் மனதினால் ஏற்படும் துன்பங்களை செய்யாமல் இருத்தலே சிறந்த பண்பாகும் என்கிறார் வள்ளுவர்.

Comments
Post a Comment