அன்பினால் காட்டுத்தீயை அழிப்போம்!
'உலகம் ஒரு கிராமம்(Global Village)' என்ற ஒரு தத்துவம் தற்போது வளர்ந்து வரும் ஒன்றாக அமைந்துள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் பரிமாற்றத்தில் புரட்சி ஆகியவை மக்களிடம் தகவலைக் கொண்டு சேர்ப்பதில் விரைவாக செயல்படுகின்றன. எவ்வளவு தூரமாக இருந்தாலும் நிமிடங்களில் ஒருத்தரைத் தொடர்புக்கொண்டு எளிதில் பேசிவிடலாம். கிராமங்களில் ஒரு இல்லத்தில் ஏதேனும் நடந்தால், அந்த கிராமம் முழுவதும் அத்தகவல் வேகமாக பரவி விடுவது போல, தற்போதய வளர்ச்சிகள் அனைத்து தகவல்களையும் எளிமையாக பரப்பி விட்டுவிடுகின்றன. இதன் காரணமாகவே 'உலகம் ஒரு கிராமம்' என்று கூறப்படுகிறது. இது நாணயத்தின் ஒரு பக்கமே.
நாம் பழகும் அனைவரிடமும் நமக்கு விருப்பு அல்லது வெறுப்பு உருவாகுகிறது. வெறுப்புணர்வு, அவர்கள் மீது கோள் சொல்ல தூண்டுகிறது. நம்மைச் சுற்றி இருக்கும் பலரில் யாருக்காவது குறை கூறுவதைக் கேட்பதில் விருப்பம் இருக்குமானால், நாமும் அவர்களிடம் சென்று ஒருவர் மீது நாம் கண்ட குறைகளைப் பகிர்ந்து கொள்ளுவோம். அவ்வாறு பகிர்ந்து கொண்ட பின், மனதிலிருந்து பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்வோம். ஆனால், அவ்வாறு குறைகளைக் கேட்க விருப்பமுடையவர்களிடம் குறையைக் கூறினபின் தான் நமக்கு பாரம் அதிகமாகிறது. அவர்கள், தங்களுக்குக் கிடைத்த இந்த தகவலைப் பலரிடம் சொல்லி அதில் ஒரு இன்பம் காணுகின்றனர். அச்செய்தியானது, ஊர் முழுவதும் சுற்றி மற்றொரு நபரால் நம்மிடமே வரும்போது, நமக்கே வியப்பாக இருக்கும். இதனால், பல்வேறு விளைவுகளை நாம் சந்திக்க நேரிடும். இது தொழில்நுட்பத்தால் பரிமாறப்படும் வேகத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகமாகும்.
ஔவையாரும் இதனையே கூறியுள்ளார். குறை கேட்க விருப்பமுள்ளவரிடம் சொல்லும் குறைகளானது, காற்றால் பரவும் காட்டுத்தீயைப் போல் பரவும் என்கிறார். காட்டின் ஒரு மூலையில் தொற்றிக்கொண்ட தீ ஆனது எவ்வாறு அந்த காட்டையே அழித்துவிடுமோ, அதுபோல், மனதில், ஏதோ ஒரு ஓரத்தில் ஒருவர் மீது இருக்கும் குற்றவுணர்வானது, படிப்படியாக நம்மிடமுள்ள நல்ல குணங்களை அழித்து இறுதியில் மனிதத்துவத்தையே அழித்துவிடும். குற்றம் கண்டாலும், அதனை பெரிதுபடுத்தாமல், நல்லதை மட்டுமே பெரிது படுத்தினால், உறவுகளும் வளரும், குற்றங்களும் அழியும், மனிதத்துவமும் தழைத்தோங்கும்!

Comments
Post a Comment