நல்லதைத் தொடர்வோம்!
'நல்லது செய்ய முடியாவிட்டாலும் தீயவற்றைச் செய்யாமல் இரு' என்ற வாக்கியம் அதிக முறை கேட்ட வாக்கியங்களில் ஒன்றாக இருக்கும். நாம் செய்யக்கூடிய நற்காரியங்கள் தடையில்லாமல் நடைபெற வேண்டும். நற்காரியங்கள் செய்யும்போது பலவித இன்னல்களும் இடர்பாடுகளும் வருவது இயல்பே. அத்தகைய சமயங்களில் மனம் துவண்டு நற்காரியங்கள் செய்வதிலிருந்து விலகிவிடலாம் என்ற சிந்தனை மனதில் எழும். அத்தகைய நேரங்களில் நல்லோர்களின் சேர்க்கை நமக்கு உறுதுணையாக இருக்கும். சாதுக்களோடு சேர்ந்து அத்தகைய இக்கட்டான சூழல்களில் பயணிக்கும்பொழுது, நமக்கு ஒரு உத்வேகம் பிறக்கும். நாமும் தொடர்ந்து அத்தகைய நற்காரியங்களைச் செய்வோம்.
நல்லது செய்வதை நிறுத்திவிட்டு தீயவற்றைச் செய்யாது அமைதியாக வாழ்ந்துக் கொண்டிருக்கலாம் என்று சிலர் எண்ணுகின்றனர். "நமக்கு எதற்கு இந்த வம்பு?" என்று எண்ணுகின்றனர். ஆனால், அவ்வாறு ஒருவரால் இருக்க முடியாது. ஏதேனும் ஒரு காரியங்களில் ஈடுப்பட்டுக் கொண்டிருப்பது தான் மனிதர்களின் இயல்பு. ஒரு காரியத்திலிருந்து விலகி, மற்றொரு காரியம் செய்யாமல் மனிதர்களால் இருக்க முடியாது. நல்லவற்றைச் செய்வதை நிறுத்தினால், அந்த இடத்தை பிடிப்பதற்கு தீய குணங்கள் ஆனது தயாராக உள்ளது. உலகம் உய்ய பாடுபடும் சாதுக்களோடு சேருவதை நிறுத்தினால், தீயவர்களின் தொடர்பு ஏற்பட்டு, தீய பழக்கவழக்கங்களில் மூழ்கி விடுவோம். இதுவே மாயையில் நம்மைச் சிக்கவைத்துவிடும். ஔவையாரின் மேற்கூறப்பட்டுள்ள நீதி மூலம் நாம் இதை அறிகின்றோம். செய்கின்ற நல்ல தவச்செயல்களை மறந்தால், கைதவம் என்று சொல்லப்படும் மாயை நம்மை ஆட்கொள்ளும்.
செய்யவேண்டிய நல்லதை செய்யாமல் இருப்பது நாம் இழைக்கும் தவறுகளில் மிகப்பெரியது. அறச்சிந்தனைகள் இருந்தும் அத்தகைய அறச்செயல்களைச் செய்யாமலும், அவற்றை நிலைநிறுத்த முயற்சிகாமல் இருப்பதும் அதர்மமே!

Comments
Post a Comment