நீடிக்கும் நட்பு!



தனி மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானவர்கள் அவர்களுடைய நண்பர்கள். மகாபாரதத்தில் இரண்டுவிதமான நட்புகளைக் காணலாம். ஒன்று, துரியோதனனுக்கும் கர்ணனுக்கும் இருந்த நட்பு. மற்றொன்று, அர்ஜுனனுக்கும் பகவான் கண்ணனுக்கும் இருந்த நட்பு. முதல் நட்பில், தர்மம் அறிந்த கர்ணன் தீய நட்பினால் அதர்மத்தின் பக்கம் நின்று தன் தவ வாழ்வை இழந்தான். மனதளவில் வலிமையிழந்து காணப்பட்ட அர்ஜுனனுக்கோ கண்ணனுடைய நட்பானது மிகவும் கைகொடுத்து, வெற்றியடையச் செய்தது. உலகிற்கு கீதையென்ற உன்னதமான வழிகாட்டியும் கிடைத்தது.

அத்தகைய நல்ல நட்பு கிடைத்தோர்கள் பாக்கியசாலிகளே. "நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி; ஒல்லும்வாய் ஊன்றும் நிலை" என்கிறார் திருவள்ளுவர். அதாவது, மனவேறுபாடு இல்லாமல், அத்தகைய மனவேறுபாடுகள் இருந்தாலும் இயன்ற இடங்களிலெல்லாம் இணைந்துப் போகும் தன்மையுடைய நண்பர்களிடத்திலேயே நட்பானது நிலைத்து நிற்கும் என்கிறார் திருவள்ளுவர். மனவேறுபாடுகளின்றி செல்ல வழியாது. இருவர் ஒரு புள்ளியில் இணைவது என்பது இக்காலக்கட்டத்தில் மிகக் கடினமான ஒன்று. அப்படிப்பட்ட நேரத்தில், நட்புணர்வுடன் இருக்க, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தள்ளி வைக்க வேண்டும்.

ஔவையாரும் இதனையே கூறியுள்ளார். நமக்கு ஏற்படும் துன்பங்களையும் வறுமைகளையும் நண்பனிடத்தில் பகிர்ந்து கொண்டால், மனதில் இருக்கும் பாரம் குறைவதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அது நமது நட்புறவில் ஒரு களங்கத்தை ஏற்படுத்திவிடுமாம். ஆகவே, நமது வருத்தங்களையும் துன்பங்களையும் நண்பர்களிடத்தில் பகிராமல் இருத்தல் சாலச் சிறந்தது. நண்பர்களிடத்தில் நல்ல பல நேர்மறையான உரையாடல்களை வைத்துக்கொண்டால், நமது நட்பானது காலம் உள்ளவரை நீடித்து இருக்கும்.

 

Comments

Popular posts from this blog

சிவபாதசேகரன் – ஒரு பாடம்!

A birthday tribute to the unifier!

மூத்தோர் சொல்