கபடமில்லா கல்வி!
கல்வி என்பது வெறும் புத்தக அறிவு மட்டுமே ஆகாது. படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் புத்தகத்தைப் படித்துவிடலாம். அவர்களுக்குப் புத்தக அறிவானது நிச்சயமாக ஏற்பட்டுவிடும். புத்தகங்களைப் படிப்பது ஒரு தகவல் பரிமாற்றம் என்ற அளவில் நின்றுவிடும். அத்தகைய புத்தகங்களை எவ்வாறு படித்திருக்கின்றோம், கல்வியை எவ்வாறு கற்றிருக்கின்றோம் என்ற பலன்கள் நடத்தையில் தான் வெளிப்படும்.
"கற்க கசடற கற்பவை கற்றபின்; நிற்க அதற்குத் தக" என்ற குறள் நாம் அனைவரும் அறிந்ததே. கற்பது பெரிது அல்ல, தீயவற்றை நீக்கி, நல்லவற்றைக் கற்பது தான் உயர்ந்தது. கற்றதை வெறும் அறிவாக வைத்துக் கொள்ளாமல், அதனை நடைமுறையில் கொண்டு வந்து நடந்து காட்டுவது தான் சிறந்தது.
நடத்தை என்பது யாது? பேசும் விதம், அனைவரிடமும் பழகும் விதம், சுயநலம் இல்லாமை, பொறுமை, அரவணைப்பு, ஒருத்தர் ஏதேனும் பேசும்போது அவரை கூர்ந்து கவனித்தல், தவறு நடைபெற்றால் துணிவுடன் அதை எதிர்த்தல், ஆகிய பல விதமான விழுமியங்களே நமது நடத்தையை தீர்மானிக்கின்றன. நாம் இத்தகைய நடத்தைகளை வெளிப்படுத்த நாமாக ஏதும் முயற்சிகள் எடுக்க வேண்டாம். நாம் கற்கும் கல்வியை சரியாக கற்றோமேயானால், இத்தகைய விழுமியங்கள் தானாக வெளிப்படும்.
"நல்ல கல்வியைக் கற்றோர், என்றும் மனதை நோகடிக்கும்படியான சொற்களை உபயோகிக்க மாட்டார்கள்" என்று ஔவையார் இந்த நீதியின் மூலம் கூறுகின்றார்.

Comments
Post a Comment