சான்றோர்களின் சார்பு!
மனம் போன போக்கில் வாழ்ந்து விடுவது அல்ல வாழ்க்கை. ஒவ்வொரு செயலிலும் நல்லது எது, தீயது எது, என்று ஆராய்ந்து முன்னெடுப்பதே சிறந்த வாழ்வாக அமையும். எதன் அடிப்படையில் ஒவ்வொரு செயலையும் நாம் ஆராய முடியும்? நமக்கு தோன்றுவதனால் ஒரு செயல் நல்லதாகவும் தீயதாகவும் ஆகி விடாது. நமக்கு தோன்றும் எண்ணங்கள், நம்முள் கட்டமைக்கப்பட்டிருக்கும் பழக்க வழக்கங்கள் மற்றும் கொள்கைகளின் வெளிப்பாடு. அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்குமா என்பது சந்தேகமே! அது முழுவதுமாக நல்லதாகவும் இருக்காது, முழுவதுமாக தீயதாகவும் இருக்காது. இந்த இடத்தில் தான் நாம் சற்று தெளிவோடு இருப்பது அவசியமாகிறது.இத்தகைய சமயங்களில், நாம் முற்றும் அறிந்த சான்றோர்களை அணுகி, அவர்களை வணங்கி ஆலோசனை பெறுதல் அவசியமாகிறது.
தத் வித்தி ப்ரணிபதேன பரிப்ரஶ்நேந ஸேவாயா
உபதேக்ஷ்யந்தி தே ஞானம்
ஞானினஸ்தத்வ-தர்ஷினா
(ஸ்ரீ பகவத் கீதா 4.34)
பகவான் கிருஷ்ணர், கீதையின் நான்காவது அத்யாயத்தில் ," உண்மையான ஞானத்தை முற்றும் அறிந்த ஞானிகளிடமிருந்து பெறவேண்டும். அத்தகைய குருவை வணங்கி, அவர்களுக்கு சேவை செய்து, மனதில் வஞ்சகமில்லாமல் அவர்களிடம் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுப்பெற வேண்டும்." என்று அர்ஜுனனிடம் கூறுகின்றார்.
கீதையில் பகவான் கூறியதை ஔவையார் இந்த நீதியின் மூலம் வழிமொழிகின்றார். பலவிதமான நூல்களைப் படித்து ஆராய்ந்து, அத்தகைய நூல்கள் காட்டும் வழியில் நமது வாழ்வை நடத்துவது சிறந்தது. முற்றும் அறிந்த சான்றோர்களிடம் தஞ்சம் அடைந்து கற்பது அதைவிட மேலானது. நூல்கள் ஏட்டறிவை மட்டுமே கொடுக்கும். பல்வேறு நூல்களை ஆராய்ந்து அனுபவத்தில் கொண்டு வந்து, அதன்படி வாழ்வை நடத்திக் கொண்டிருக்கும் முற்றும் உணர்ந்த சான்றோர்களிடம் கற்றால், அவர்களது தொடர்பு நம்மை மேலும் செம்மைப்படுத்தும்.

Comments
Post a Comment