நமக்கு நாமே!
மனதைக் காட்டிலும் ஒருவருக்கு சிறந்த நண்பரும் இல்லை, சிறந்த எதிரியும் இல்லை. மனதில் தோன்ற கூடிய எண்ணங்களே அனைத்து விதமான செயல்களுக்கும் காரணமாக அமைகிறது. நாம் செய்யக்கூடிய எந்தவித செயல்களும் தன்னிச்சையாக அமைந்தது என்று கூறிவிட முடியாது. திடீரென்று ஒரு செயலைச் செய்தாலும், என்றோ ஒருநாள், அதற்கான எண்ணம் நமக்குள் தோன்றியிருக்கும். அத்தகைய எண்ணத்தின் வெளிப்பாடே நமது செயல்கள் ஆகும்.
தெரியாமல் செய்த பிழைகள் என்று ஒன்றும் இருக்க முடியாது. அதைச் செய்த நேரம் வேண்டுமானால் தற்செயலாக நடந்து இருக்கலாம், பிழைகள் தற்செயலாக நடந்திருக்க முடியாது. முன்பு ஒருநாள் அச்செயல் குறித்த எண்ணம் மனதில் தோன்றியிருக்கும். அன்றே, இந்த எண்ணம் நமக்கு தேவையற்றது என்று விலக்கி இருந்தோமேயானால், பின்பு திடீரென்று அச்செயலைச் செய்வதற்கான வாய்ப்புகள் வந்திருக்காது. நேர்மறையான எண்ணங்கள் வரும்போது, அதை ஊக்குவிக்க வேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் வரும்போது, துளிர்விடும்போதே அதை கிள்ளி எறிதல் வேண்டும்.
அவ்வாறு, நமது எண்ணங்களைத் தூய்மைப் படுத்த சான்றோர்களுடன் சேர்ந்து இருப்பதே சிறந்த வழியாக அமையும். "மனதை மீறி நடக்கும் குற்றம் என்று ஒன்று இல்லை." என்கிறார் ஔவயார்.

Comments
Post a Comment