கள்ளமில்லா மனம்!
இவ்விடத்தில் ஔவையார், தூய்மையான மனதை வெள்ளை நிறத்திற்கு ஒப்பாக கூறுகிறார். தூய்மை என்பது நமது சிந்தையிலும் செயலிலும் வெளிப்படும். நமது குணங்களையும் நல்ல பண்புகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்று செயற்கையான முயற்சிகள் ஏதும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. மல்லியின் நறுமணத்தை விளம்பரப் படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. மல்லியின் மணம் இயற்கையாக பரவும். நமது உள்ளம் எப்படியோ அப்படி தான் நமது செயல்களும். வெள்ளைக்கு கள்ளச் சிந்தையும் இல்லை, கள்ளச் சந்தையும் இல்லை.
தூய்மையான உள்ளம் படைத்தவர்கள், தமது துன்ப காலங்களிலும், ஒருபோதும் குறுக்கு வழியிலோ கள்ள முயற்சியிலோ துன்பத்திலிருந்து விடுபட முன்வரமாட்டார்கள். கள்ள சிந்தனையற்று இருப்பவர்களிடம் ஒரு ஆழ்ந்த அமைதி நிலவும். அது அவர்களைச் சுற்றி உள்ளவர்களிடமும் பற்றிக்கொள்ளும்.
" புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே! பூமியிற் கண்டோமே. பகைநடுவினில் அன்புரு வானநம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே! பரமன் வாழ்கின்றான்."
என்கிறார் பாரதியார். அதாவது, கள்ளமற்ற உள்ளம் என்பது உலகமே பகையாக இருந்தாலும், அந்த பகைக்கு நடுவிலும் அன்பு நிறைந்த பரமன் வாழ்கின்றான் என்று தான் எண்ணுமாம். அத்தகைய மனமே வெள்ளையான மனம். இத்தகைய மனம் பலமே அன்றி பலவீனம் அல்ல.

Comments
Post a Comment