இல்லறத்தின் நல்லறம்


விருந்தோம்பல் என்பது நம் நாட்டவரின் தலையாய பண்பு. திருவள்ளுவரும் விருந்தோம்புதலின் பெருமையைக் கூறும் போது, "செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்; நல்வருந்து வானத் தவர்க்கு" என்று விருந்திடுவோரின் மேன்மையை தேவர்களுக்கு ஒப்பாக கூறுகிறார். அதாவது, வருவோருக்கு விருந்து அளித்துவிட்டு, மேலும் விருந்தளிக்க அன்பர்களை எதிர்நோக்கி இருப்பவர் தேவர்களுக்கு ஒப்பாவார் என்று கூறுகிறார்.

விருந்து என்பது அறுசுவை உணவிட்டு, தனது செல்வ செழிப்பை காண்பிப்பது அல்ல. விருந்தினராக வருவோர் விரும்பி ஏற்றுக்கொள்ளும் ஒன்றை அவர்ளுக்கு தந்து, அன்போடு அவர்களை உபசரிப்பதே ஆகும். செல்வம் விருந்தோம்பலுக்கு தடையாகி விடக்கூடாது. அவரவர்களின் நிலைமைக்கேற்ப வருவோருக்கு அளிக்கப்படும் விருந்தில் அன்பையும் கலந்து அளித்தால் வருவோரும் மகிழ்வர்; தருவோரும் மகிழ்வர். 

விருந்திற்கு அளவும் ஆடம்பரமும் முக்கியமல்ல, அன்பும் அரவணைப்பும் தான் முக்கியம். இல்லறத்தில் இருப்போருக்கு அழகு 'விருந்திடுதல்' என்கிறார் தமிழ் மூதாட்டி. செல்வ செழிப்பு நிறைந்து இருந்து, வருவோரிடம் முக மலர்ச்சி இல்லாது உபசரிக்கவில்லை என்றால் அந்த செல்வத்தால் அவர்களுக்கு மனநிறைவு ஏற்படாது. செல்வம் இல்லை என்றாலும், தன்னால் முடிந்ததை வருவோருக்கு அளிப்பவருக்கு செல்வம் கொடுக்காத நிறைவையும் அந்த உணர்வு அவர்களுக்கு அளிக்கும். 

ஆகவே, இல்லறத்தின் உயர்ந்த ஒழுக்கங்களில் ஒன்றாக விருந்தோம்பலைக் கூறுகின்றார் ஔவையார். வருவோரை வரவேற்போம்! அகமகிழ்ந்து உபசரிப்போம்!

Comments

Popular posts from this blog

சிவபாதசேகரன் – ஒரு பாடம்!

A birthday tribute to the unifier!

மூத்தோர் சொல்