பெற்றோரைப் பேணுவோம்!


இளமையும் முதுமையும் வயதால் மட்டும் வருவதல்ல. வெளிப்புறத் தோற்றம் ஒருவரை இளமையாக காட்டினாலும், மனதளவில் துவண்டு, எப்போதும் சோர்ந்து, எதெற்கெடுத்தாலும் மனதில் கவலை மற்றும் பிற எதிர்மறையான எண்ணங்கள் நமது பலத்தைக் குறைத்துவிடுகின்றன. மனதளவில் பலத்தைக் குறைக்ககூடிய செயல்கள் நமது பலத்தைக் குறைப்பது போல, இளைமையில் வீர்யத்துடன் நாம் செய்ய வேண்டிய நற்செயல்களையும் செய்ய முடியாமல் சென்றுவிடும். 

முதுமையான காலத்தில் மகிழ்வுடன் இருப்பது மிகவும் அவசியம். முதியவர்களுக்கு அத்தகைய மகிழ்வானது தங்களது பிள்ளைகளாலேயே பெரும்பாலும் கிடைக்கும். இளமையில் மனதளவில் பலத்தை இழந்தவர்கள், பெற்றோர்களுக்கு செய்யும் கடமைகளையும் மறந்து செய்ய முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய தவிப்பு, அவர்களின் மனதை வறுத்தமுறச் செய்கின்றது. சிலருக்கு, தங்களின் பெற்றோர்கள் குறித்த கவலை ஏதும் இல்லாமலும் இருக்கின்றனர். இக்காலத்தில், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் ஆகியவை நிரம்பி வழிவதைக் காண்கின்றோம். நமது பாரத திருநாட்டில், பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்ட மதிப்புகள் நாளடைவில் சீர்குலைந்து வருகின்றன. இளைஞர்கள் மனதளவில் பலமாக இருந்தால், வயதான காலத்தில் அவர்களின் பெற்றோர்களையும் இளமையாக வைத்துக் கொள்ள முடியும்.

ஒரு பிள்ளைத் தன் பெற்றோர்களுக்கு முதுமையான காலத்தில், அவர்களின் தேவைகளைக் குறிப்பறிந்து, அவர்கள் கேட்பதற்கு முன் செய்ய வேண்டுமாம். அவ்வாறு செய்யும் பிள்ளைகளின் பெற்றோர்கள், எவ்வளவு தான் மூத்தவர்களாக இருந்தாலும், அமிர்தம் உண்டு சாவா வரம் பெற்ற தேவர்களைப் போல, இளமையாகவே இருப்பார்களாம். இதனையே ஏவா மக்கள் மூவா மருந்து என்கின்றார் ஔவையார். "அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்; சிறுகை அளாவிய கூழ்" என்ற திருக்குறளில், தனது பிள்ளைகள் கையிலிருந்து சிறிது கூழ் வாங்கிக் குடித்தாலும், அதனை தேவாமிர்தத்திற்கு இணையாக கொள்வாராம் பெற்றோர்கள் என்கின்றார் திருவள்ளுவர்.
 

Comments

Popular posts from this blog

சிவபாதசேகரன் – ஒரு பாடம்!

A birthday tribute to the unifier!

மூத்தோர் சொல்