பாரதப்பெண் - சாவித்ரி ஒரு சகாப்தம்!

 

பாரதப்பெண்!



“மங்கையராய்ப் பிறப்பதற்கே- நல்ல

மாதவம் செய்திட வேண்டுமம்மா”

பாரத மணித்திருநாட்டில் பெண்களுக்கு என்று உயர்ந்த இடம் என்றும் உண்டு. பெண்களாய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும் என்கிறார் மகாகவி பாரதியார். நமது இதிஹாஸப் புராணங்களிலும் பெண்களின் மேன்மையை இவ்வுலகிற்கு உணர்த்தும் பற்பல தருணங்களை நாம் காணலாம். வரலாற்றிலும் எத்தனையோ பெண்களின் கதைகளை நாம் படிக்கின்றோம். அந்த வகையில் நமது பாரத நாட்டின் மிகப்பெரிய இதிஹாசம் ‘மகாபாரதம்’ ஆகும். மகாபாரதத்தில் பற்பல உப கதைகள் உண்டு. அத்தகைய கதைகளில் மணிவிளக்காய் அமைவது ‘சத்யவான் சாவித்ரி’ கதை.

பொறுமை, எடுத்த காரியத்தைத் திண்ணமாக முடிக்கும் மனவலிமை, வைராக்கியம், போன்ற பற்பல குணங்கள் பெண்களிடம் அதிகமாக காண முடிகின்றது. அதிலும் நமது பாரதப்பெண்களிடத்தில் இத்தகைய குணங்கள் சற்று அதிகமாகவே காணப்படும். இத்தகைய குணங்களால் அவர்கள் செய்யும் செயல்கள் அசாதாரணமாக இருக்கும். சாவித்ரியின் கதையும் அத்தகையதே!

 சத்தியவான்:

முற்கால வரலாற்றின் படி, பரத கண்டத்தின் மேற்கு திசையில் அமைந்த ஒரு நாடு தான் சால்வ நாடு. இந்த சால்வ நாட்டின் அரசனாக இருந்தவர் தியூமத்சேனன். இவருக்கு கண்பார்வை கிடையாது. இருந்தாலும் பீஷ்மரின் சமகாலத்தவரான இவர் நல்லாட்சியை புரிந்து வந்தார். இவருக்கு ஒரு மகன் இருந்தான். காலப்போக்கில் அரசப்பதவியை இழந்து செல்வங்களை இழந்து காட்டை நோக்கி தனது மனைவியுடனும் தனது குழந்தையுடனும் சென்றான் தியூமத்சேனன். காட்டிற்கு சென்றாலும் தனது அறச்சிந்தையை விடாது தனது புதல்வனையும் அத்தகைய நற்சிந்தைகளுடன் வளர்க்கின்றார். அந்த ராசக்குமாரனின் நேர்மையான குணங்களை பாராட்டி காட்டில் உள்ள முனிவர்கள் எல்லாம் அவனுக்கு சத்யவான் என்று பெயர் கொடுத்தனர். மிகுந்த ஆற்றல் கொண்டவன். ஒரு இராஜகுமாரனுக்கு தேவையான அனைத்து திறமைகளையும் உடல் பலத்தையும் நிறைவாக பெற்றிருந்தான். அறநெறி வழுவாதவன்.

 சாவித்ரி:

இன்றைய பாகிஸ்தானுக்கும் பஞ்சாப்பிற்கும் இடையில் சியால்கோட் என்ற பகுதியில் அமைந்தது தான் மத்ர தேசம். இந்த மத்ர தேசத்தை வளம் பெற ஆண்டு வந்தான் அஸ்வபதி என்ற அரசன். இவனுடைய பெண் தான் சாவித்ரி! ராஜகுமாரியான இவள் பெண்களுக்குரிய அத்தனை இலக்கணமும் மிக நேர்த்தியுடன் பொருந்தியவளாக இருந்தாள். சாஸ்திரங்களைக் கற்று பல வித்தைகளையும் அறிந்து தந்தைக்கு பிடித்த மகளாக இருந்தாள். பதினாறு வயது கடந்தவுடன் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைக் கொண்டார் தந்தை. திருமண பேச்சு எடுத்தவுடன், வருந்தி வருந்தி அழைத்தாலும் வராத மாமுனியான நாரதர் அஸ்வபதியின் அரண்மனைக்கு வந்தார். நாரதரிடம் தனது பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கும் தகவலைத் தெரிவித்து, அதற்கு தாங்கள் ஆசிர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சாவித்ரியை அழைத்து நாரதரிடம் ஆசி வாங்கிக்கொள்ள் சொன்னார். நாரதருக்கு சாவித்ரியைக் கண்டவுடன், இவளுக்கு ஏற்றவன் சத்தியவான் தான் என்று தோன்றியது.

 சத்தியவான்-சாவித்ரி திருமணம்:

அஸ்வபதியிடம் இது குறித்து ரகசியமாக பேச துவங்கினார் நாரதர். தியூமத்சேனனின் பெருமைகளை சொல்லி, சத்தியவானின் பராக்கிரமத்தை எடுத்துக்கூறியவுடன் அஸ்வபதியும் தனது மகளை சத்தியவானுக்குத் தான் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.அஸ்வபதியும் அரசன் என்பதால் தியூமத்சேனனின் அறம் சார்ந்த அரசாட்சியை ஏற்கனவே அறிந்திருந்தான். “உன்னுடைய மகளை சத்தியவானுக்கு திருமணம் செய்வது ஆகச்சிறந்தது. ஆனால், திருமணம் ஆகி சரியாக ஒரு வருடத்தில் சத்தியவான் இறந்து விடுவான். அதற்காக பயமுற வேண்டாம். உனது மகளின் ஆற்றல் அனைத்தையும் சரி செய்யும்.” என்றார் நாரதர். அஸ்வபதிக்கு இதைக் கேட்டவுடன் மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. ஆனால் நாரதரின் வாக்கில் நம்பிக்கைக் கொண்ட அவர், தனது மகளிடம் இதுகுறித்து பேசினார். சாவித்ரியும் இதனை சம்மதித்தாள். சாவித்ரியும் முன்பே சத்தியவானின் குணங்களால் ஈர்க்கப்பட்டிருந்தாள். அஸ்வபதிக்கும் சாவித்ரிக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

 தியூமத்சேனனை சந்தித்து சத்தியவானுக்கு மத்ர தேசத்து அரசன் அஸ்வபதியின் மகள் சாவித்ரியைப் பெண் பார்த்துள்ளதாக நாரதர் கூறினார். இதனைக் கேட்ட தியூமத்சேனன், முதலில் மகிழ்வடைந்தாலும், தனக்கு எந்தவித சொத்தும் சுகமும் இல்லாததால் தயங்கினார். அஸ்வபதியும் தங்களின் மகனுக்கு சாவித்ரியை திருமணம் செய்துவிக்க மகிழ்வான சம்மதம் தெரிவித்தார் என்றார் நாரதர். தியூமத்சேனனும் மகிழ்வுடன் சம்மதித்தார்.

 மிக பிரம்மாண்டமாக இருவரின் திருமணமும் நடந்தேறியது. சத்தியவானுக்கு ஏற்ற சாவித்ரியாகவும் சாவித்ரிக்கு ஏற்ற சத்தியவானாகவும் இல்லற வாழ்வில் மிகுந்த ஆனந்தத்துடன் இருந்தனர். இளவரசியாக இருந்தாலும் புகுந்த வீட்டின் ஏழ்மையை சற்றும் பாரமாக ஏற்றுக்கொள்ளாது, அதைத் தன் பாக்கியமாக கருதி மாமனார், மாமியார் மற்றும் கணவர் என அனைவரிடமும் புன்முறுவல் பூத்த முகத்துடன் பணிவிடை செய்துக் கொண்டிருக்கின்றாள் சாவித்ரி.

ஒரு பெண்ணின் மன வலிமை:

நடக்கவிருக்கும் அனைத்து அசம்பாவிதங்களையும் அறிந்து இருந்தாள் சாவித்ரி. நாரதர் சொன்ன அந்த நாளும் நெருங்கியது. மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் துவங்கும் காலம். அந்த நாளிலிருந்து ஏழு நாட்கள் முன்பாக தனது கடுமையான விரதத்தைத் துவக்கினாள். கடைசி மூன்று நாட்கள் முழுவதும் உணவு உண்ணாமல் கடுமையான நோன்பு இருந்தாள். நாரதர் குறித்த அந்த நாளும் வந்தது. சத்தியவான் காட்டிற்கு வேட்டையாட சென்றான். இரவு ஆனது. நீண்ட நேரம் கழித்தும் கணவன் வராததால் சாவித்ரி புரிந்துகொண்டாள். மாமனாரிடமும் மாமியாரிடமும் தான் சென்று கணவனைத் தேடி வருவதாக சொல்லி விட்டுப் புறப்பட்டாள்.

நாரதர் கூறியபடியே, சாவித்ரி சரியாக எண்ணியபடியே, மரக்கிளையிலிருந்து கீழே விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான் சத்தியவான். எமதர்மராசன் தனது வாகனமான எருமை மீது வந்து சத்தியவானின் கழுத்தில் பாசக்கயிற்றையும் போட்டான். சத்தியவானின் உயிரும் பிரிந்தது. சத்தியவானை எடுத்துக்கொண்டு தனது உலகத்திற்கு திரும்ப துவங்கினார் எமதர்மராசன்.

பொறுமையும் நிதானமுமே வலிமை:

தற்பொழுது தான் சாவித்ரியின் தவப்பலனின் மகத்துவத்தைப் பார்க்கப் போகின்றோம். தனது கணவனை அழைத்துக்கொண்டு செல்லும் எமதர்மரைப் பின் தொடர்ந்தாள் சாவித்ரி. இதுவரை ஒருவரைத் தன் லோகத்திற்கு அழைத்துக்கொண்டு செல்லும்பொழுது மற்றொருவர் தானே பின் தொடர்வதை முதல் முதலாக பார்த்து வியந்தார் எமதர்மர். “உனக்கு என்ன வேண்டும்? இப்படி பின் தொடர்ந்து வரக்கூடாது. நீ திரும்ப செல்.” என்று சாவித்ரியிடம் சொல்லிவிட்டு மேலே தொடர்ந்தார் எமன். இவளும் விட்டப்பாடு இல்லை. “சாமி எனக்கு சில வரம் வேண்டும்.” என்றாள். இவள் என்ன கேட்பாள் என்பதை யூகித்த எமன், “உன் கணவனைத் திரும்ப உயிரோடு தர முடியாது. நீ திரும்பச் செல்” என்றார்.

 “இல்லை சாமி, நான் என் கணவனை கேட்கவில்லை. நீங்கள் தர்மத்தின் வழியில் நிற்பவர் என்று எனக்கு தெரியும். உங்களது தர்மத்தைக் கண்டு வியக்கின்றேன்” என்று எமதர்மனின் குணங்களை பாராட்டியவுடன். இவளை கவனிக்க துவங்கினார் எமன். “உனக்கு என்ன வரம் வேண்டும்?” என்றார். “சாமி, என் மாமனார் ஒரு நாட்டிற்கு அரசனாக இருந்தார். சில சூழ்ச்சிகளால் அவர் அனைத்தையும் இழந்து காட்டில் மிகவும் கடினமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவர் இழந்த அரசாங்கம் மற்றும் அனைத்து செல்வத்தையும் மீட்டு தர வேண்டும்.” என்றாள் சாவித்ரி. இதைக்கேட்ட எமதர்மன் பூரித்துப் போனான். தனது கணவனை இழந்தும், தனக்கென்று எதுவும் கேட்காமல் தனது மாமனரின் நலனில் அக்கறைக்கொண்ட இவளுக்கு அவள் கேட்டப்படி வரமளித்தார். மீண்டும் தனது பயணத்தைத் துவக்கினார் எமன். சாவித்ரியும் பின் தொடர்ந்தாள்.

“உனக்கு தான் வரமளித்துவிட்டேனே, திரும்ப செல்” என்றார். “இல்லை சாமி, மற்றொரு வரம் எனக்கு தர வேண்டும்” என்றாள் சாவித்ரி. சற்று யோசித்த எமன், “இவள் நம்மை விட மாட்டாள் போலிருக்கின்றதே” என நினைத்தவாறே என்ன வேண்டும் என்றார். “அரசாட்சியையும் இழந்த செல்வத்தையும் திரும்ப கொடுத்துவிட்டாலும், அதனை கண்டு அனுபவிக்க எனது மாமனாருக்கு கண்பார்வை இல்லை சாமி. நீங்க அதையும் சரி செய்ய வேண்டும்.” என்றவுடன், சாவித்ரியின் பொதுவுடைமையை கண்டு வியப்புற்றார் எமதர்மன். இவள் நடந்து கொள்ளும் விதமும், தனது கணவனை இழந்தாலும், அவனை மீண்டும் தாருங்கள் என்று கேட்காமல், தன்னுடைய மாமனாரின் நலத்தை விரும்புகின்ற மனோபாவமும் எமதர்மரை உருகச் செய்து அதனையும் வரமாக அளித்தார்.

“சாமி, எனக்கு நீங்க இவ்வளவு அனுகிரஹம் செய்துள்ளீர்கள். என்றென்றும் நான் தீர்க சுமங்கலியாக இருக்க ஆசீர்வதியுங்கள்” என்று எமதர்மரின் காலில் நெடுஞ்சான்கிடையாக விழுந்து வணங்கினாள். இவளது செயலினால் மிகவும் கருணை கொண்ட எமதர்மரும், “அவ்வாறே, நீ தீர்க சுமங்கலியாக இருப்பாய்!” என்று அருளினார். இந்த ஆசீர்வாதத்தைக் கொடுத்தப்பின் அங்கு உயிரற்று இருந்த சத்தியவான் உயிர் பெற்று எழுந்தான். எமதர்மருக்கு ஒன்றும் புரியவில்லை. “சாமி நீங்கள் தானே சுமங்கலியாக இரு என்று ஆசிர்வதித்தீர்கள்! ஒரு பெண் கணவனோடு இருந்தால் தானே சுமங்கலி. தங்களுடைய வரத்தால் என் கணவன் கிடைத்தார்!” என்றாள் சாவித்ரி. சாவித்ரி சாதித்தாள். சாவித்ரியின் பேச்சாற்றலையும் அவளது மன உறுதியையும் கண்டு எமதர்மருக்கே தலை சுற்றியது. ஆனாலும், ஒரு பெண்ணின் வலிமையை பாராட்டி சத்தியவானை உயிரோடு சாவித்ரியிடம் ஒப்படைத்தார் எமன். அவ்வாறு சத்தியவானை சாவித்ரி மீட்க விரதமிருந்ததை தான் ‘காரடையான் நோன்பு’ என்று மஞ்சள் கயிற்றைக் கட்டி தங்களது கணவனின் நலனுக்காக நமது தேசத்து இல்லத்தரசிகள் ஒரு நாளாவது விரதம் இருப்பதை இன்றும் நம்மால் காண முடிகின்றது.

(மார்ச் 14 – இந்த வருடத்திற்கான காரடையான் நோன்பு)

எமதர்மராசன், தனது பணியில் முதலும் கடைசியுமாக ஒரு ஜீவனின் உயிரைப் பறித்தப்பின்னும் அதனை திரும்ப உயிருடன் தந்தது சாவித்ரியின் அளவில்லா ஆற்றலுக்காகவே. ஒரு பெண் சக்தியின் பொறுமையும் மன உறுதியும் எமதர்மரையே ஆட்டம் காண வைத்தது. தனது கணவனை மீட்பது தான் நோக்கம். இருந்தாலும், எமனிடத்தில் நேரடியாக கேட்டால் அது நிறைவறாது என்று உணர்ந்து, தனது மன உறுதியாலும்,  நிதானத்தாலும், பேச்சாற்றலாலும் உயர்ந்த இலட்சியத்தை நிறைவேற்றிக்கொண்டாள் சாவித்ரி. தனது கணவனோடு மீண்டும் தனது இல்லத்திற்கு திரும்பினாள். அங்கு பார்த்தால் கோலங்கள் மாறியிருந்தன. இழந்த கண்பார்வையையும் அரசப்பதவியையும் திரும்பப் பெற்றிருந்தார் தியூமத்சேனன்.

ஒரு வீட்டில் ஒரு பெண் எப்படி இருக்கின்றாளோ, அப்படி தான் அந்த வீட்டின் நிலைமையும் இருக்கும் என்பதற்கு சாவித்ரியின் வாழ்க்கை ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஒரு பெண்ணின் பொறுமையினாலும், மன உறுதியாலும், பொதுவுடைமை சிந்தனையினாலும், இழந்த அனைத்தையும் பெற முடியும் என்பதை சாவித்ரி மட்டும் அல்ல, நமது பாரத திருநாட்டில் வாழும் எத்தனையோ இல்லத்தரசிகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். சாவித்ரி பாரதப்பெண்களின் அடையாளம்!




Comments

Popular posts from this blog

Where does India stand today?

சிவபாதசேகரன் – ஒரு பாடம்!

Amarajeevi Potti Sreeramulu